அமர்த்தியா சென்

Amartya Sen

அமர்த்தியா சென் அவர்கள், ‘நோபல் பரிசும்’, ‘பாரத ரத்னா புரஸ்கார் விருதும்’ பெற்று, இந்திய குடிமக்களுள் மிக முக்கியமான பொக்கிஷமாக கருதப்படுபவர். அவர், ஏராளமான மாற்றங்களை பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் கொண்டு வந்து, புரட்சிகரமான சிந்தனை முறைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் சவால் விடுத்தார். தனது சிறு வயதிலேயே வங்கப் பிரிவினையின் போது நடந்த மோசமான விளைவுகளையும், வன்முறைகளையும் நேரில் கண்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்த அனுபவம் அவருக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்ததோடு மட்டுமல்லாமல், “இந்தப் பிரிவினை, அரசியலில் புதைக்கப்பட்ட நெஞ்சறிந்த மறைப்புரை” என்றும், இந்த அனுபவத்தை தனது படைப்புகளில் சொந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். அமர்த்தியா சென் அவர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகளைப் பற்றி மேலுமறிய ஆவலாக இருந்தால், தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: நவம்பர் 3, 1933

பிறந்த இடம்: சாந்திநிகேதன், வங்காள மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா (இன்றைய மேற்கு வங்காளம்)

தொழில்: பொருளியலாளர், எழுத்தாளர், பேராசிரியர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

அமர்த்தியா சென் அவர்கள், அஷுதோஷ் சென் மற்றும் அமிதா சென் தம்பதியருக்கு நவம்பர் 3, 1933 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மேற்கு வங்கத்திலிருக்கும் சாந்திநிகேதன் என்ற இடத்தில் ஒரு பெங்காலி இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தார். சாந்திநிகேதன், ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வ-பாரதி பள்ளி / கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

அமர்த்தியா சென் அவர்களின் மூதாதையர்களின் இருப்பிடம் இப்போது வங்காளத்தின் தலைநகரான ‘டாக்கா’ ஆகும். ஆகவே, அவரது தந்தையான அஷுதோஷ் சென், டாக்கா பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சில ஆண்டுகள் கழித்து, மேற்கு வங்கத்தின் பொது சேவை ஆணைக்குழு தலைவராகி டெல்லியில் பணியாற்றினார். சென் அவர்கள், சாந்திநிகேதனுக்கு வரும் முன், அவர் வங்காளத்திலிருக்கும் ‘புனித கிரிகோரி பள்ளியில்’ கல்வி கற்றார். சென் அவர்களின் தாய்வழி தாத்தா ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வ-பாரதி பள்ளியில் ஒரு ஆசிரியராகவும், அவரது அம்மா ஒரு மாணவியாகவும் இருந்ததால், சென்னும் இப்பள்ளியில் படித்தார் என்றால் அதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவரது உயர் கல்விக்காக கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரிக்குச் சென்று பொருளாதாரம் (மேஜர்) மற்றும் கணிதத்தில் (மைனர்) பி.ஏ. பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜிலுள்ள டிரினிட்டி கல்லூரியில், தூய பொருளாதாரத்தில் மற்றுமொரு பி.ஏ பட்டத்தைப் பெற்றார்.

தொழில்

1956ல் கேம்பிரிட்ஜிலிருந்து திரும்பிய அமர்த்தியா சென் அவர்கள், புதிதாக நிறுவப்பட்ட கல்வி நிறுவனமான ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இருபத்தி மூன்று வயதாக இருந்ததால், அங்குள்ள மக்கள் மத்தியில் அதிருப்தியை அது ஏற்படுத்தியது. ஓரிரு ஆண்டுகள் அந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின்னர், அவர் கேம்பிரிட்ஜிற்குத் திரும்ப சென்று, டிரினிட்டி கல்லூரியில் தத்துவப் பாடத்தில் சேர்ந்தார். 1963 ஆம் ஆண்டு, இந்தியா திரும்பிய அவர், தில்லி பல்கலைக்கழகத்திலும், தில்லி பொருளாதார பள்ளியிலும் பொருளாதார பேராசிரியராக பணியில் அமர்ந்தார். 1970ல், அவரது முதல் புத்தகமான “கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோசியல் வேல்ஃபார்” என்ற படைப்பை வெளியிட்டார். 1971 ஆம் ஆண்டில், அவரது மனைவியின் உடல்நிலை மோசமானதால், அவர் டெல்லியை விட்டு, லண்டனுக்குச் சென்றார். இருப்பினும், அவரது மனைவி இறந்ததால், அவர்களது திருமண பந்தம் ஒரு முடிவுக்கு வந்தது. 1972 ஆம் ஆண்டில், லண்டன் பொருளாதார பள்ளியில் பேராசிரியராக சேர்ந்து, 1977 வரை பணிபுரிந்த அவர், அதற்கு பின், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள நட்ஃபீல்ட் கல்லூரியின் முதல் பொருளியல் பேராசிரியர் என்ற பெருமை இவரையே சேரும். 1986 வரை அங்கு பணிபுரிந்த பின்னர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

அவரது படைப்புகள்

சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி, வெளியிட்ட வரலாற்று உரிமை அமர்த்தியா சென் அவர்களுக்கு உண்டு. 1981 ஆம் ஆண்டு அவர் தனது கட்டுரையான, ‘பாவர்ட்டி அண்ட் ஃபாமைன்ஸ்: (வறுமை மற்றும் பஞ்சம்): உரிம மற்றும் வாழ்வாதாரங்களின்மைக்கான ஒரு கட்டுரையை’ வெளியிட்டார். அவர் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தில் வெளியிடப்பட்ட “ஹ்யூமன் டெவலப்மென்ட் ரிப்போர்ட்” (மனித அபிவிருத்தி அறிக்கை), என்ற கட்டுரையையும் எழுதியுள்ளார். 1990 ஆம் ஆண்டில், அவர் தி நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக்ஸில், அவரது சர்ச்சைக்குரிய கட்டுரைகளில் ஒன்றான “மோர் தான் ஹன்ட்ரெட் மில்லியன் வுமன் ஆர் மிஸ்ஸிங்” என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டார். அமர்த்தியா சென் அவர்கள், இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் அவைகள் பல முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

பங்களிப்பு

அமர்த்தியா சென் அவர்கள், தனது ஆராய்ச்சி மூலமாக அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் புதிய தரங்களைக் கொண்டு வந்தார். இன்று அதிகாரிகளின் செல்வாக்கை நிர்வகித்து, துன்பத்திற்கான வழிகளைக் கண்டுபிடித்து ஒழித்ததோடு மட்டுமல்லாமல், ஏழைகளின் வருமான இழப்பிற்கான மாற்றீடாக இருப்பனவற்றையும் கண்டுபிடித்தார். பொருளாதார வளர்ச்சி பகுதியில், அவர், “ஈக்வாலிட்டி ஆஃப் வாட்” என்ற ஆய்வு கட்டுரையின் மூலமாக ‘செயல்திறனின் கோட்பாட்டை’ அறிமுகப்படுத்தினார். இது பொருளாதார வளர்ச்சியில் அவருடைய முக்கிய பங்களிப்பாகும்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

  • 1954: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஆடம் ஸ்மித் பரிசு’ வழங்கப்பட்டது.
  • 1956: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஸ்டீவென்சென் பரிசு’ வழங்கப்பட்டது.
  • 1976: மகாலானோபிஸ் பரிசு பெற்றார்.
  • 1986: அரசியல் பொருளாதாரத்தில் ‘ரேங்க் ஈ செய்ட்மேன் டிஸ்டிங்கஷ்ட் விருது’ கிடைத்தது.
  • 1990: நெறிமுறைகளுக்கான ‘செனட்டர் ஜியோவானி அக்னெல்லி சர்வதேச பரிசு’ பெற்றார்.
  • 1990: ‘ஆலன் ஷான் ஃபெய்ன்ஸ்டீன் வேர்ல்ட் ஹங்கர் விருது’
  • 1993: ஜோன் மேயர் ‘குளோபல் குடியுரிமை விருது’
  • 1994: ஆசிய சமூகத்தின் ‘இந்திரா காந்தி தங்க பதக்கம் விருது’
  • 1997: ‘எடின்பர்க் பதக்கம்’
  • 1997: ஒன்பதாவது ‘கட்டலோனியா சர்வதேச பரிசு’
  • 1998: பொருளாதாரத்தில் ‘நோபல் பரிசு’
  • 1999: ‘பாரத் ரத்னா விருது’
  • 1999: வங்காள அரசின் ‘கெளரவ குடியுரிமை’ வழங்கப்பட்டது.
  • 2000: உலகளாவிய அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்திலிருந்து ‘லியன்டெஃப் பரிசு’
  • 2000: அமெரிக்காவின் தலைமை மற்றும் சேவைக்காக ‘ஐசனோவர் பதக்கம்’
  • 2000: ‘சாம்பியன் ஆஃப் ஹானர்’
  • 2002: சர்வதேச ஹ்யுமனிஸ்ட் மற்றும் எதிக்கல் யூனியனிலிருந்து ‘சர்வதேச ஹ்யுமனிஸ்ட் விருது’
  • 2003: இந்திய வர்த்தக சேம்பர் அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்தது’
  • யுனெஸ்கேபின் (UNESCAP) ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

காலவரிசை

1933: நவம்பர் 3, 1933 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள வங்காள மாகாணத்திலிருக்கும் சாந்திநிகேதனில் பிறந்தார்.

1953: கொல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

1955: கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

1959: கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், ஹெச்.ஏ. மற்றும் பி.எச்.டி முடித்தார்.

1956: கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக அவரது முதல் பணியைத் தொடங்கினார்.

1963: தில்லி பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக பணியேற்றார்.

1970: அவரது முதல் புத்தகமான “கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோசியல் வேல்ஃபார்” வெளியிடப்பட்டது.

1972: லண்டன் பொருளாதார பள்ளியில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.

1977: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.

1986: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.

1989: பொருளாதாரத்திற்காக ‘நோபல் பரிசு’ பெற்றார்.

1999: ‘பாரத ரத்னா புரஸ்கார்’ விருதைப் பெற்றார்.